என் தலை... அஞ்சல் தலை!
அஞ்சல் தலைகளைச் சேமிப்பது சுவாரஸ்யமான கலை. ஒரு நாட்டின் தலைவர்கள், கலாசாரம், பழக்க வழக்கங்கள், வரலாறு போன்றவற்றை அறியவும் தூண்டுகோலாக விளங்குகிறது.
நமது நாட்டின் அஞ்சல்தலைகளை யோசித்துப்பாருங்கள், காந்தி, நேதாஜி, நேரு, இந்திரா காந்தி, அண்ணா என நீண்டு செல்லும் அந்தப் பட்டியலில் உங்கள் படமும் இடம்பெற்றால் எப்படி இருக்கும்?
'மிகப் பெரிய சாதனைகள் செய்தவர்களும் தலைவர்களும் மட்டுமே இடம்பெற்ற அஞ்சல்தலையில் இனி, நமது படமும் அச்சிடப்படும். அதை நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழலாம்.
உங்களுடைய படம் மட்டுமல்லாது; நீங்கள் வரைந்த ஓவியங்கள், எடுத்த படங்கள் போன்றவற்றையும் தபால்தலையாக அச்சிட்டு வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பெயர், 'என் அஞ்சல்தலை’(MY STAMP).
எனது அஞ்சல் தலை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலுடன், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறப்பு தபால்தலை சேகரிப்பு மையங்களில் விண்ணப்பிக்கலாம். சென்னையில் இருந்து வாடிக்கையாளர்களின் புகைப்படம் ஒட்டிய தபால் தலைகள் தயாரிக்கப்பட்டு அவர்களது சொந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 7 நாட்களுக்குள்ளும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள்ளும் தபால் தலை அனுப்பி வைக்கப்படும். இதில் ரூ.300-க்கு 12 அஞ்சல் தலைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, பின்னர் இதற்கான விண்ணப்பங்களை தலைமை தபால்நிலையங்களில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு, ஜம்மு, புனே, கோழிக்கோடு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இது படிப்படியாக மற்ற ஊர்களிலும் செயல்படுத்தப்படும் என இந்திய அஞ்சல் துறை அறிவித்து இருக்கிறது. மே 3-ம் தேதி சென்னையில் இந்தத் திட்டம் அறிமுகமானது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, போலந்து போன்ற பல நாடுகளில் பல ஆண்டுகளாகவே இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
நமது படம் அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகளால் என்ன பயன்?
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் தனிநபர் கடிதப் போக்கு வரத்துகள் குறைந்துவிட்டன. இந்தத் திட்டம் கடிதப் போக்குவரத்துகளை ஊக்குவிக்கும். உங்கள் உறவினருக்கோ, நண்பருக்கோ அனுப்பும் கடிதத்தில் உங்கள் படம் அச்சிடப்பட்ட அஞ்சல்தலை ஒட்டப் பட்டு இருந்தால், அதைப் பார்ப்பவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்?
நீங்கள் அஞ்சல்தலை சேகரிக்கும் பழக்கம்கொண்டவராக இருந்தால், உங்களுடைய ஆல்பத்தில் உங்கள் முகம்கொண்ட அஞ்சல்தலையும் இருக்கும். உங்கள் நண்பர்களின் சேமிப்பிலும் இடம்பெறலாம்.
ஃபேமிலி ட்ரீ எனப்படும் குடும்ப வரைபடம் தயாரிக்கும்போது, உங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை உறுப்பினர்களின் படங்களும் அச்சிடப்பட்ட அஞ்சல்தலைகளை அதில் ஒட்டி அசத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-2854 3199 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, என் அஞ்சல் தலை திட்ட தகவல்களை பெறலாம்.
Courtesy: Vikatan
|